Wednesday, 10 September, 2008

என் அடையாளங்கள்..
நேற்று வரை எனதென்று
நான் நினைத்த சூழல்
காலத்தோடு கலைந்துப் போனதை
என் புலன் தட்டி உணர்த்தின
சுவேச்சையாய் காலடி பதித்த இடங்களில்
தயக்க கோலமிட்ட என் கால் விரல்கள்...

தரையில் புரண்டெழுந்து நடை பழகிய
என் வீட்டு புழக்கடையும்,
காற்றை விட சுதந்திரமாய் பறந்து திரிந்த
பரந்த முற்றமும்,
படையலுக்காய் காத்திருக்கும் பண்டங்களை
பாட்டியின் கண்படாமல்
திருட்டு ருசி பார்த்த
இருட்டு சமையலறையும்,
களைத்த பின் கண்ணயர
இன்னொரு தாய் மடியாய்
ஒய்யாரமாய் நடுகூடத்தில்
காற்றோடு நடனமாடும்
அழகிய ஊஞ்சலும்,

இன்னும்
அதிகாலை பூபாளமாய்
குருவியின் செல்ல கூச்சலும்,
சாப்பிடும் நேரமறிந்து
தவறாமல் வந்து நிற்கும்
காகமும்,
எந்நேரமும் பின்பாட்டாய்
ஒலிக்கும் ரயில் சத்தமும்
இவை போல் பலவும் அடங்கியுள்ள
என் வீடு
இனி எனதல்ல
என் தாய் வீடு..

ஆயினும் மழைக் காலத்து காளான்களாய்
அங்கங்கே முளைத்து விட்டுருக்கின்றன
நான் இங்கே வாழ்ந்ததற்கான
என் அடையாளங்கள்..

Sunday, 27 July, 2008

முடிவிலியாய்...

பரபரவென கரைந்துப் போகும் வினாடிகளுக்கு மத்தியில்
தொடர் ஓட்டமாய் விரையும் நாளின் முடிவில்
நீங்காமல் இழையோடும் காதலோடு
தேடித்தேடி கோர்த்த வார்த்தைகளை வைத்து
இன்றும் எழுதத் தான் நினைத்தேன உன்னை...

நித்தமும் நித்தரையில் உன் ஆக்ரமிப்பை
நிசத்தில் உன் அன்பை
சற்றே கோபித்துக்கொள்ளேன் எனும் உன் ஆசையை
எந்நிலையிலும் கோபித்துக் கொள்ளவியலா உன் நடத்தையை
திடகாத்திரமான உன்னுள் மறைந்திருக்கும் குழந்தைத்தனத்தை
சொல்லவியலா எண்ணங்கள் சுற்றி வரும் உன் விருப்பத்தை
என்றும் என்றென்றும் எனக்கேயான உன்னை...

எழுதத் தான் நினைத்தேன்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
முடிவிலியாய்....

Friday, 11 April, 2008

மெளன மொழி..


வார்த்தைகள் மட்டுமே நேசம் தரும் என நினைத்திருந்தேன்
அருவியாய் கொட்டும் வார்த்தைகளுக்கிடையே
அங்கங்கே தேங்கி நிற்கும்
உன் சில மெளனங்கள் அறியும் வரை...

மெல்ல மெல்ல உடையும் நம்மிடையேயான
மெளன நொடிகளுக்குள் புகுந்து புறப்படுகின்றன
சில நேச சொற்கள்
உன்னை என்னிடமும் என்னை உன்னிடமும்
அறிமுகப்படுத்த...

பிரம்மபிரயத்தனத்தோடு அலையும்
அச்சொற்கள் பாவம் அறிந்திருக்கவில்லை,
கண்களின் மொழியை விடவும்
இதயத்தின் மொழியை விடவும்
சக்தி வாய்ந்தது
நம் மெளன மொழி என்று...

Monday, 4 February, 2008

இனி வண்ணங்கள் மட்டுமே...


மரித்துப் போன நினைவுகள் படிந்த
இலையுதிர் காலத்துச் சருகுகள்
இடறிக்கொண்டே இருந்தன என் காலடியில்..

வசந்தம் வந்த நேரத்தில்
துளிர்த்தன புதிய இலைகள்..

கர்வத்துடன் பச்சிலைகளும்
அனுபவத்துடன் சருகுகளும்
மாறி மாறி படபடத்தன..

பச்சையும் பழுப்பும்
சண்டையிட்டு கொண்டாலென?

காலத்தின் கட்டாயத்தில் இலையுதிர்தல்
மீண்டும் துளிர்ப்பதற்கே...

மெல்லிய முறுவல் என் இதழ்களில் பூக்க
மனத்தீ வளர்த்து சருகுகள் எரித்தேன்..

நினைவுகள் புகையாய் மேலெழும்பி
வசந்தத்தின் நினைவிலைகளின்
மென்காதுகளில் ஓதி விட்டுச் சென்றன
வாழ்வின் ரகசியத்தை..

வானவில்லின் வண்ணம் சுமந்து
வசந்தத்தின் பாதையில் அடிவைத்தேன்
இனி வண்ணங்கள் மட்டுமே...

Sunday, 20 January, 2008

யாரையும் காயப்படுத்தா ஓர் கவிதை...
எவ்வளவு முயற்சித்தும்
எழுத முடியவில்லை
யாரையும் காயப்படுத்தா ஓர் கவிதையை..

வரையப்படும் வார்த்தைகளின்
ஒவ்வோர் எழுத்தும்
யாரோ ஒருவரின்
வலியாக அங்கீகரிக்கப்படும் நேரத்தில்
எழுதுபவரின் வலியும்
அதில் தொனிந்திருக்கும்
வாய்ப்புகள் அறியப்படாமலே போய் விடுகிறது..

இருப்பினும் நிற்பதில்லை
முயற்சியும் கவிதையும்..

Wednesday, 16 January, 2008

மனமும் காலமும்...

காலத்திற்கும் மனதிற்குமான
ஓட்டத்தில் மனம் முந்திச் சென்றது
சிறகுகள் படப்படக்க
கனவுகள் கண்களிலேந்தி..

மெல்ல கரைந்து வந்த காலம்
பின்னோக்கி இழுத்தது மனதை
எம்முயற்சிக்கினும் தடுக்கவியலா
சில காட்சிகள் அரங்கேறி
அங்கேயே முடிந்தது நாடகம்..

கால வெளியின் கனந்தாங்காமல்
சிறகுகள் ஒடிந்து
கீழே வீழ்ந்த மனம்
அதிர்ந்தே போனது
சிலுவையில் அறையப்பட்ட
கணத்தில்..

உயிர்த்தெழ தேவை
மீண்டும் காலமும்
சிறிது நம்பிக்கையும்..

தவறாய்ப் போன
சில காலடிச்சுவடுகள்
முள்ளாய் உறுத்தியது
உண்மையென்றாலும்
சில
நியாயப்படுத்துதல்களின் தேவையின்றி
தொடர்கிறது பயணம் வேறோர் பாதையில்..

Friday, 4 January, 2008

பொய்கள் நீக்கப்பட்ட கவிதை..

சொற்களின் பின்னே ஒளிந்துக் கொண்டு
பொய்களின் முலாம் பூசிய
நமக்கிடையேயான சொல்லாடல்களில்
எந்நேரத்திலும் வந்துவிடக்கூடுமென
காத்திருந்தேன்
சேதியை சுமந்து வரும் வினாடிக்கு...

வினாடியாய் வரைந்த கவிதையை
நெஞ்சோடு நிறுத்தி வைத்தேன்
கரை புரண்டு ஓடிவிடுமென,
சுமை இறக்கும் நேரத்தில்
பரிசளிக்க..

சுமையாய் விரைந்த நொடிகளுக்கிடையே
இதோ வந்துவிட்டதென
நான் மலரும் நொடிகளெல்லாம்
காற்றோடு கரைந்துப் போயின
கானல் நீரினும் வேகமாய்..

கானல் நீரென தெளிந்து
இனி எப்போதும் வாராதென
நெஞ்சோடு புதைத்து வைத்தேன்
உனக்காக எழுதிய
பொய்கள் நீக்கப்பட்ட அக்கவிதையை..

புதைந்த கவிதையின் முழு உருவமாய்
உன் விழி நோக்கி விடைபெற்ற நேரத்தில்
திக்குமுக்காடிப் போனேன்
சொற்களற்ற ஓர் வடிவமாய்
என்னை அடித்துச் சென்ற
உன் நேசத்தில்..