Wednesday 29 August 2007

நிலவாய் நான்..
உயிர்வாழ்தலுக்கான
எல்லா காரணங்களும் தோற்றுப்போயின
என்னிடம்..

விரலிடுக்கில்
விரைந்தோடும் தண்ணீராய்
என் கடைசி இரவின்
கண்ணீர் கணங்கள்..

மூடிய விழிகளுக்குள்
தோற்றலுக்கான காரணங்கள்
செந்தழலாய் நடனமாட..
சாட்சியாய் நின்ற நிலவு
இறங்கி வந்து
முகம் துடைத்தது..

பன்னீர் துளிகளின்
சில்லென்ற தொடுகையில்
விழி திறந்தேன்
நிலவில் பிரதிபலித்தது
என் முகம்..

விண்மீன்கள்
வழி காட்ட
வானம் ஏறினேன்..

நிலவாய் நான்..

முகில் திரைகளை விலக்கி
நான் பார்த்த புவியெங்கும்
வியாபித்திருந்தது
என் இருப்பிற்கான அவசியங்கள்..

உயிர்விடுத்தலுக்கான
எல்லா காரணங்களும் தோற்றுப்போயின
என்னிடம்..

மெல்ல இறங்கிவந்தேன்
முழுமதியாய்..

Monday 13 August 2007

சீக்கிரம் கேட்டு விடு எனக்கான கேள்வியை!..


கண்களை மறைத்த
விரல்களின் ஊடே
குறும்புத்தனமாய் எட்டிப்பார்த்து
கண்ணாமூச்சி விளையாடும்
சிறார்களைப் போல்,
இத்தனை நாட்களும்
நம் தொலைப்பேசி
உரையாடல்களில்
உண்மையின் பின் ஒளிந்துக்கொண்டு
ஓடி விளையாடின சொற்கள்
என்றாவது சந்திக்கும் போது
எங்குச் சென்று ஒளியப்போகிறோமென்ற
கவலையில்லாமல்!

கிழக்கை சந்தித்த ஆதித்யனாய்
இன்று நீ என்னை
சந்தித்த போது
திகைத்த நம் சொற்கள்
ஒலியை காற்றுக்கு தாரை வார்த்து
மெளனவெளியில்
நம்மை மேடையேற்றி
கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்றன
ஒரு சாட்சியாக!

இமைகள் துடிக்கும் பொழுதினிலும்
மறையாத என் கர்வம்
உன் மீசை முறுக்கினில்
சிக்கிக்கொண்டு படப்படக்க,
வெட்கத்தை துறந்து
மெல்ல
என் இதழ்கள் விரிய
உத்தரவு கிடைத்ததென
புன்னகை புரிந்தன
உன் இதழ்கள்!

மழையென வார்த்தைகளுடன்
சில பல சீண்டல்கள்
மின்னலாய் வந்திறங்கினாலும்,
ஏனோ
உன் சீண்டல்கள் மட்டும்
சிறிதும் தூண்டவில்லை
இம்மென்ற கணத்திலும்
வெடிக்கும் சாத்தியக்கூறுகள்
கொண்டிருந்த
என் எரிமலையை!

அலைபேசி அரட்டைகளில்
அபிரிதமான சொற்களை
கடன் வாங்கியும் பேசதயங்காத
நம் அதரங்கள்
ஏனோ
சந்திப்புகளின் போதுமட்டும்
ஊமையாகி விட்டன!

உனக்கான ஆயிரம் பதில்களுடன்
அலைகின்றேன் நான்,
சிறிதாகிலும் விலகத்தொடங்கிய
நம்மிடையேயான திரையின்
இடைவெளிக்குள்
சிக்கிக்கொள்வதற்கு முன்
சீக்கிரம் கேட்டு விடு
எனக்கான கேள்வியை!

Wednesday 1 August 2007

இன்னும் இரவு மிச்சமிருக்கிறது...

கருமை படர்ந்த இரவொன்றில்
கனவுகள் சூழ்ந்த
என் காத்திருப்பின் வரமாய்,
விழிகள் நோக்கி
நீ செலுத்திய மெளனங்கள்
வந்தமர்ந்தன
வெற்றுத்தாளாய் படபடத்த
என் இதயப்புத்தகத்தில்;

விழிகளின் மொழி விளங்காமல்
பேச வந்த உன் நேசம்
திக்குத்தெரியாமல்
தொலைந்துப்போனது
என்னுள்;

மெளனமாய் நீ எழுதிய
நேசக்கவிதையை
நான் வாசித்ததறியாமல்
மெல்ல பின்னடைந்தாய்
இரவின் நிழலுள்;

நேசத்தின் பூரணத்தில் கரைந்து
என்னையும் இழுத்துக்கொண்ட
நீ,
அறியாமல் இருந்துவிட்டாய்
உன் உயிரினில்
என்றோ ஏகிய
என் இருப்பை;

சூலடைந்த நேசத்தின்
வலி தாங்காமல்
கதறிய உன் மனம்
அறியாமல் இருந்து விட்டது,
நேசத்தை சுமந்தது
நானும் தான் என்று!

மறைத்த வார்த்தைகளை
உடனழைத்து நீ மறைந்தாலும்
நிசப்தமுற்ற இரவுகளின்
நீண்ட நீழல்களுள்
நித்தமும் தேடிச்செல்கிறேன் உனை;

வழிதோறும் மணம்பரப்பி
முகிழ்ந்துக்கிடக்கின்றன
சொல்லாமல் மறைத்த
எனக்கான நேச சொற்கள்,
விழிநீரை பனித்துளியாய் தாங்கி!

மொத்தமாய் அள்ளியெடுத்து
தொடுத்துவைத்த
உனக்கான பூச்சரத்தை
கையிலேந்தி
காத்திருக்கிறேன்,
இன்னும் இரவு மிச்சமிருக்கிறது,
கனவுகள் இனியும் வரக்கூடும்,
கிழக்கில் எனக்கான கிரணங்களை சுமந்தபடி!