Sunday 23 December 2007

பூக்களில் உறங்கும் மெளனங்கள்...

பிரித்தறிய இயலா வண்ணம்
விரல்களாய் ஒன்றிவிட்ட தீக்குச்சிகள்
எட்டாப் படிப்பை எண்ணி எண்ணி
கணக்குத் தீர்க்கும் விரல்கள்..
வீட்டோடு இலவசக் கணக்குப் பாடம்!

வானம் மறைத்து கூரை வேய
மகிழ்ச்சி மறுத்து மண் பிசையும் பிஞ்சுக் கால்களும்,
சுட்டெடுக்கும் ரேகை தேய்ந்த உள்ளங்கைகளும்..

வண்ணம் பொழியும் வானவேடிக்கைகளில்
சிதறி விழுகின்றன வண்ணம் பார்த்திரா
இவர்தம் விழிநீர்த் துளிகள்..

வியர்வை மழையில் நித்தமும் நனைந்து
பருவத்தை தொலைத்து உயிர் கரைய உழைக்கும்
பிஞ்சு விழிகளில் உறங்குகின்றன கனவுகள்
பூக்களில் உறங்கும் மெளனங்கள்...
பி.கு : இக்கவிதை சிறில் அலெக்ஸ் நடத்தும் கவிதைப் போட்டிக்காக..

Thursday 20 December 2007

கோலம்...

சோம்பலுடன் எழும்பும்
சூரியனின் ஸ்பரிசம் படாமல்
வில்லாய் வளைந்து
சீராய் புள்ளிகள் விதைத்து
பழக்கப்பட்ட பாதையில்
பயணிக்கும் கால்களைப் போல்
வளைந்து நெளிந்து
கோடுகள் இழுத்து
தரையில் ஓவியமாய் வரைந்த கோலத்தை
அழகு பார்த்த நேரத்தில்
சட்டென எழுந்தது ஓர் சந்தேகம்
கோலத்தினுள் சிக்கியவை புள்ளிகளா?
புள்ளிகளிடம் சிக்கியது கோலமா?

Wednesday 12 December 2007

நிதர்சனம்...

ஆசைகள் ஊற்றி வளர்த்த
இதயச்செடி
பருவத்தில் சிலிர்த்து படைத்தது
கனவு ரோஜாக்கள்..

சுகந்தமாய் மணம் பரப்பி
தித்திக்கும் தேன் ஏந்தி
மிதப்போடு நின்ற மலர்களை
சற்றே தீண்டிய பொழுது
நிமிடத்தில் வெட்கித்து
பலவண்ணம் கொண்டு
பறந்துச் சென்றன
வண்ணத்துப்பூச்சிகளாய்,
தீண்டிய விரல்களில்
ரத்தம் பூசி..

சில சமயங்களில்
மறந்து தான் போகின்றது
மலர்களோடு,
முட்களும் இருக்கும் என்கிற நிதர்சனம்..

Monday 3 December 2007

சகிப்பு..
மிச்சமென ஒதுக்கி வைத்த
எச்சில் பண்டங்களும்
அலட்சியமாய்த் தூக்கி எறிந்த
உடைந்த கண்ணாடித் துண்டங்களும்
மக்காத பாலிதீன் பைகளும்
படித்துக் கிழித்த காதல்கடிதங்களும்
சுத்தம் செய்த மாமிசத்தின்
துர்நாற்றமெடுக்கும் மிச்சங்களும்
ஊர் கூடி வாழ்த்திய திருமண பந்தியில்
இடமில்லாமல் வந்து விழுந்த
எச்சில் இலைகளால்
பிச்சை உண்போரின்
அன்னதானக் கூடமென
நாற்றம் சுமக்கும்
குப்பைத் தொட்டிக்கு
சகிப்பு அதிகமென
விட்டுச் செல்கின்றனர்
சில சிசுக்களையும்...

Tuesday 27 November 2007

புதிர் உடையும் நேரம்..
மாபெரும் ரகசியமாய்
விரவிக்கிடந்த கடலின்
கரை அமர்ந்து தவங்கிடந்தேன்
புதிர் உடையும் நேரத்திற்காய்..

கடலுக்காய் கரையிடம்
தூது வந்த அலை
விஷமச் சிரிப்போடு
கால்களை உரசியபடி சொன்னது
பலநூறு யுகங்களாய்
சொல்லத்துடிக்கிற சேதி ஒன்றை..

கால்களே செவிகளாக
மூளைக்கெட்டிய ரகசியத்தை
மனதோடு பூட்டி வைத்தேன்
உன்னிடம் உடைக்க..

எளிதில் கரையாத
அந்த இரவில்
அலை நுரையெல்லாம்
அள்ளியெடுத்து செதுக்கி வைத்தேன்
நம் முழுநிலவை..

துணைக்காய் விதைத்து வைத்தேன்
சில விண்மீன்கள்
ஆழத்து முத்துக்களை
முழுகியெடுத்து..

சிரத்தையாய்
நான் படைத்த உலகத்தில்
ஒரே உயிராய் நான்
சாட்சியாய் இந்த சமுத்திரம்
தோழியாய் கடலலை,
அவள் ரகசியம் எனக்குமாய்
என் ரகசியம் அவளுக்குமாய்..

விடியத்துவங்கும் வினாடிகளில்
வந்ததோர் சேதி
வினாடிப்பொழுது
கண்ணயர்ந்த நேரத்தில்
நீ வந்து சென்றதாய்...

விட்டுவிட்டேனடி என பதைத்த
நேரத்தில் அலைத்தோழி கால்களை
உரசியபடி கொண்டு சேர்த்தாள்
சில நல்முத்துக்கள்..

ஏந்திய கைகளில் பளப்பளத்தன
உன் விழிநீர்த்துளிகள்..

புதிர் உடைந்த இன்பத்தில்
அமைதியாய் ஆர்ப்பரித்தது கடல்..

Wednesday 21 November 2007

வினாவிற்கு விடையாய்....


என்றும் நினைத்துப் பார்த்ததில்லை
இப்படி நினைப்பேனென்று!

நினைக்காத வரை செய்யாத ஒன்றை
நினைத்ததும் செய்ய விழைவதேன்?
விழைந்ததும் செய்யாத ஒன்றை
இன்று நினைத்ததும் செய்வதேன்?

செய்தலின் காரணமாய்
சொல்வதற்கு ஏதுமில்லையெனில்
ஏன் நினைத்தேன்?
ஏன் செய்தேன்?

வினாவிற்கு விடையாய்
என் நினைத்தலுக்கும் செய்தலுக்குமான
இடைவெளியில்
உன் இருப்பை உறுதி செய்தது
என்னைக் கடந்து சென்ற
உன் சுவாசம் சுமந்த மென்தென்றல்...

Wednesday 31 October 2007

புரிதல் என்பது...

குத்திக் கிழித்தன
உன் வார்த்தைகள்,
என் இதயத்தில்
இறங்கிய கத்தியாய்.

புரிதல் என்பது,
புரிந்துக்கொள்ளப்படாமல் போகும் பொழுது
கண்களில் நிரம்பி,
என் கன்னங்களில் வழிந்து,
வலியின் சுவடுகளை
விட்டுச் சென்றது,
என் கண்ணீர் துளிகள் அல்ல,
கிழிந்த என் இதயத்தின்,
ரத்த துளிகள்...


இன்று
காலம் பறந்து
நினைவுகள் கடந்து
சுவடுகள் மறைந்தாலும்
என் மீதான உன் புரிதலை
உலகுக்கு
நீ உரத்துச் சொல்லும்
ஒவ்வொரு நொடியும
நினைவுப்படுத்துகின்றது
அன்று
ஒரே நொடியில்
உன் மீதான என் புரிதலை
நீ பொய்யாக்கியதை..

பி.கு : இது ஒரு மீள்கவிதை, போன வருடம் எழுதியது. இறுதி பத்தி மட்டும் இப்பொழுது சேர்த்திருக்கிறேன்.

Tuesday 23 October 2007

தேடத் தான் முயல்கிறேன்..


எனக்கான நியாயங்களை வகுத்து
நான் மட்டுமே பயணிக்கும்
என் பாதையில்
மலர்வனங்களோடு முட்வேலிகளும்
என்னை களிப்பூட்ட,
திகைக்க வைப்பவை
நான் அறியா திசைகளிலிருந்தும்
நான் அறியா மனங்களிலிருந்தும்
முட்பாணங்களாய்ப் பாய்ந்து வரும்
ஆயிரம் கேள்விகளே..

மாபெரும் யுத்தங்களில் உயிர்கொண்ட
ஆயுதங்களையே வெல்லும் ஆபத்தான
இக்கேள்விகளுக்குள்
மீண்டும் மீண்டும் புகுந்து சென்று
எதையென்று தெரியாமல்
தேடத்தான் முயல்கிறேன்..

அவரவர்கான கேள்விகளுக்கு
அவரவர் தீர்மானித்த விடைகளையே
எதிர்நோக்குமிடத்தில்
என் தேடலின் பயன் தானென்ன?
எனக்கேயான நியாயங்களுடன்
எனக்கேயான விடைகளை
என்னோடு மட்டுமே வைத்திருப்பதை தவிர...

Tuesday 16 October 2007

உனைத் தீண்ட...
கரை தேடும் அலையென
நிழல் தேடும் மரமென
நீர் தேடும் நெருப்பென
உனை தேடும் மனம்
அறிந்திருக்கவில்லை
இயற்கை வகுத்திருக்கும்
சாத்தியக்கூறுகளின் எல்லைக்கோடுகளை...

அலையில் மிதந்து வரும் இலையாய்
வெயிலில் மிகுந்து வரும் வெம்மையாய்
தழலில் வளர்ந்து வரும் ஒளியாய்
இயல்பை மீறி
நீண்டுக்கொண்டிருக்கிறது
என் தேடல்...

எல்லைத் தாண்டி
உனைத் தீண்ட...

Wednesday 3 October 2007

முதல் நொடி...நினைவுகளுள் ஒளிந்துள்ள
அந்த நொடியை தேடுகிறேன்...

விண்ணுடன் ஊடல் கொண்டு மண் சேர்ந்த
மழைத்துளியினை ரசித்த பொழுதா?
குட்டைத் தண்ணீரில் தன்னழகை கண்டுகளித்த
அம்புலியின் செய்கையில் மயங்கிய பொழுதா?

நினைத்த பொழுதினில்
நினைத்தது நிகழாத பொழுதா?
காற்றில் மிதந்து வந்த இசையினை
என்னுள் நுகர்ந்த பொழுதா?

உறவுசூழ் வெளியில்
தனித்து நின்ற பொழுதா?
களங்கமில்லா தொடுதல்களின்
நெறி தவறிய பொழுதா?

முதல் நேசத்தின்
கள்ள சந்திப்புகளின் பொழுதா?
அதுவே கானல் நீரென
மறைந்த பொழுதா?

சர்வமும் அறிந்த தோழியிடம்
சொல்லாமல் மறைத்த சொற்கள் முட்களாய்
மனதை துளைத்த பொழுதா?

நிகழ்வுகளை சொற்களின் மாலையாக்கி
எனக்கு நானே கவிதையாய் சூட்டிக்கொண்ட
அந்த முதல் நொடியை தேடுகிறேன்...

Monday 17 September 2007

அன்பெனும் வாள்..

உன் மனநிலத்தில் விதைத்திருந்த நேசம்
முளை விட்டு அறுக்கிறது
என் நெஞ்சத்தை!

தொண்டை வற்றி பாலையில் திரியும் நாட்களில்
அமுதமென நீரில் மிதந்து வருகிறது
உன் காதல்!

உன் உயிர்மூச்சை சுமந்து வரும் காற்று
வருட மறுக்கிறது இலைகள் தாங்கிய பனித்துளிகளை
என் மேனியை தழுவுதலே
முதல்பணியென்று!

ஆதியும் அந்தமுமில்லா ஆகாயத்தை ஒத்திருக்கும்
உன் அன்பு வாரி அணைக்கிறது
என் அண்ட சராசரங்களையும்!

தீயில் மெழுகாய் உருகினாலும்
நாற்புறமும் பிரகாசிக்கிறது
உன் இருப்பு!

என் எல்லா திசைகளிலும் நிறைந்து
தாளாத நேசத்துடன்
இதயத்தை கீறும்
உன் அன்பெனும் வாளை
சற்றே இறக்கி வை
நான் அழுது விட்டு வருகிறேன்!

Wednesday 29 August 2007

நிலவாய் நான்..
உயிர்வாழ்தலுக்கான
எல்லா காரணங்களும் தோற்றுப்போயின
என்னிடம்..

விரலிடுக்கில்
விரைந்தோடும் தண்ணீராய்
என் கடைசி இரவின்
கண்ணீர் கணங்கள்..

மூடிய விழிகளுக்குள்
தோற்றலுக்கான காரணங்கள்
செந்தழலாய் நடனமாட..
சாட்சியாய் நின்ற நிலவு
இறங்கி வந்து
முகம் துடைத்தது..

பன்னீர் துளிகளின்
சில்லென்ற தொடுகையில்
விழி திறந்தேன்
நிலவில் பிரதிபலித்தது
என் முகம்..

விண்மீன்கள்
வழி காட்ட
வானம் ஏறினேன்..

நிலவாய் நான்..

முகில் திரைகளை விலக்கி
நான் பார்த்த புவியெங்கும்
வியாபித்திருந்தது
என் இருப்பிற்கான அவசியங்கள்..

உயிர்விடுத்தலுக்கான
எல்லா காரணங்களும் தோற்றுப்போயின
என்னிடம்..

மெல்ல இறங்கிவந்தேன்
முழுமதியாய்..

Monday 13 August 2007

சீக்கிரம் கேட்டு விடு எனக்கான கேள்வியை!..


கண்களை மறைத்த
விரல்களின் ஊடே
குறும்புத்தனமாய் எட்டிப்பார்த்து
கண்ணாமூச்சி விளையாடும்
சிறார்களைப் போல்,
இத்தனை நாட்களும்
நம் தொலைப்பேசி
உரையாடல்களில்
உண்மையின் பின் ஒளிந்துக்கொண்டு
ஓடி விளையாடின சொற்கள்
என்றாவது சந்திக்கும் போது
எங்குச் சென்று ஒளியப்போகிறோமென்ற
கவலையில்லாமல்!

கிழக்கை சந்தித்த ஆதித்யனாய்
இன்று நீ என்னை
சந்தித்த போது
திகைத்த நம் சொற்கள்
ஒலியை காற்றுக்கு தாரை வார்த்து
மெளனவெளியில்
நம்மை மேடையேற்றி
கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்றன
ஒரு சாட்சியாக!

இமைகள் துடிக்கும் பொழுதினிலும்
மறையாத என் கர்வம்
உன் மீசை முறுக்கினில்
சிக்கிக்கொண்டு படப்படக்க,
வெட்கத்தை துறந்து
மெல்ல
என் இதழ்கள் விரிய
உத்தரவு கிடைத்ததென
புன்னகை புரிந்தன
உன் இதழ்கள்!

மழையென வார்த்தைகளுடன்
சில பல சீண்டல்கள்
மின்னலாய் வந்திறங்கினாலும்,
ஏனோ
உன் சீண்டல்கள் மட்டும்
சிறிதும் தூண்டவில்லை
இம்மென்ற கணத்திலும்
வெடிக்கும் சாத்தியக்கூறுகள்
கொண்டிருந்த
என் எரிமலையை!

அலைபேசி அரட்டைகளில்
அபிரிதமான சொற்களை
கடன் வாங்கியும் பேசதயங்காத
நம் அதரங்கள்
ஏனோ
சந்திப்புகளின் போதுமட்டும்
ஊமையாகி விட்டன!

உனக்கான ஆயிரம் பதில்களுடன்
அலைகின்றேன் நான்,
சிறிதாகிலும் விலகத்தொடங்கிய
நம்மிடையேயான திரையின்
இடைவெளிக்குள்
சிக்கிக்கொள்வதற்கு முன்
சீக்கிரம் கேட்டு விடு
எனக்கான கேள்வியை!

Wednesday 1 August 2007

இன்னும் இரவு மிச்சமிருக்கிறது...

கருமை படர்ந்த இரவொன்றில்
கனவுகள் சூழ்ந்த
என் காத்திருப்பின் வரமாய்,
விழிகள் நோக்கி
நீ செலுத்திய மெளனங்கள்
வந்தமர்ந்தன
வெற்றுத்தாளாய் படபடத்த
என் இதயப்புத்தகத்தில்;

விழிகளின் மொழி விளங்காமல்
பேச வந்த உன் நேசம்
திக்குத்தெரியாமல்
தொலைந்துப்போனது
என்னுள்;

மெளனமாய் நீ எழுதிய
நேசக்கவிதையை
நான் வாசித்ததறியாமல்
மெல்ல பின்னடைந்தாய்
இரவின் நிழலுள்;

நேசத்தின் பூரணத்தில் கரைந்து
என்னையும் இழுத்துக்கொண்ட
நீ,
அறியாமல் இருந்துவிட்டாய்
உன் உயிரினில்
என்றோ ஏகிய
என் இருப்பை;

சூலடைந்த நேசத்தின்
வலி தாங்காமல்
கதறிய உன் மனம்
அறியாமல் இருந்து விட்டது,
நேசத்தை சுமந்தது
நானும் தான் என்று!

மறைத்த வார்த்தைகளை
உடனழைத்து நீ மறைந்தாலும்
நிசப்தமுற்ற இரவுகளின்
நீண்ட நீழல்களுள்
நித்தமும் தேடிச்செல்கிறேன் உனை;

வழிதோறும் மணம்பரப்பி
முகிழ்ந்துக்கிடக்கின்றன
சொல்லாமல் மறைத்த
எனக்கான நேச சொற்கள்,
விழிநீரை பனித்துளியாய் தாங்கி!

மொத்தமாய் அள்ளியெடுத்து
தொடுத்துவைத்த
உனக்கான பூச்சரத்தை
கையிலேந்தி
காத்திருக்கிறேன்,
இன்னும் இரவு மிச்சமிருக்கிறது,
கனவுகள் இனியும் வரக்கூடும்,
கிழக்கில் எனக்கான கிரணங்களை சுமந்தபடி!

Wednesday 25 July 2007

காத்திருப்பின் அவசியமற்று...

தனிமையில்
தவங்கிடக்கிறது
என் கவிதை
இது வரை வரையப்படாத
வார்த்தைகள் வேண்டி!

காத்திருப்பின் இடைவெளியில்
மெல்ல எட்டிப்பார்க்கிறது
மறைந்திருந்த என் சோகம்

எட்டிப்பார்த்த சோகமோ
விட்டுச்சென்றது
கனமான விழித்துளிகளை

கண்ணீர் சொல்லாத காவியத்தையா
செதுக்கப்போகின்றது வார்த்தைகள்?

காத்திருப்பின் அவசியமற்று
கலைந்துப்போனது
என் கவிதை
கண்ணீர் திவலைகளின்
சுவடுகள் வரைந்து!

Thursday 28 June 2007

முடிவில்லா பயணப்பாதையில்!
விழிகள் மூடி
மெளனித்திருந்த வேளையில்
விரிந்தன காட்சிகள்
மெல்ல ஒரு ரகசியமாய்.

ரகசியங்கள்
விரியத் தொடங்கிய கணத்தில்
உள்ளுக்குள் சுகமாய்
தூங்கிக்கொண்டிருந்த
உண்மைகள்
மெல்ல எட்டிப்பார்க்க,
கனம் தாங்காமல் விழிகள்
வழிய விட்டன
கண்ணீர் துளிகளை.

துளிகளுக்குள் பொதிந்திருக்கும்
உண்மையும் அறியுமோ?
அது புதைக்கப்பட்டதின் ரகசியத்தை!

ரகசியங்களின் ஆழத்திலும்
கிடைக்காத ஒன்றை
தேடிக்கொண்டு பயணிக்கினறன
என் கண்ணீர்துளிகள்
முடிவில்லா பயணப்பாதையில்!

Wednesday 20 June 2007

எதுவும் சொல்லி விடாதே !


சோம்பல் முறித்த என் வார்த்தைகள்
நிமிர்ந்து எழுந்தன,
உன்னை பற்றி நான் எழுதும் கணங்களில்;

உனக்கான என் நேசத்தின் வார்த்தைகளை,
எழுத, எழுத,
அட!
எழுத்துக்களுக்கு கூட நாணம் வந்து விட்டது
என் பெண்மையைப் போல;

நிரம்பவும் யோசித்து,
வார்த்தைகளை யாசித்து,
நாணத்தில் தோய்த்து,
நான் எழுதியதை விடவும்
அதி வேகமாய்,
அதி ஆழமாய்,
என் விழிகளே சொல்லிவிட்டனவே,
உனக்கான என் தவிப்பை!

இது புரியாமல் நான் எழுதியதில்
நீ இன்னுமா தேடுகிறாய்
நேசத்தின் வார்த்தைகளை?

இனியவனே!
ஒவ்வொரு காதலிலும்
சொல்லாத வார்த்தைகளில் தான்
சொல்லப்படுகின்றது நேசம்;
எனவே,
எதுவும் சொல்லி விடாதே!

Friday 18 May 2007

இருளின் கரம் பிடித்து..


இருளின் கரம் பிடித்து
நான் எடுத்து வைத்த காலடித்தடங்கள்
ஓடத்துவங்கின
வெளிச்சம் நோக்கி;

திகைத்து நின்ற பொழுதினிலே
மெல்ல தென்றல் என் காதுகளில்
ரகசியமாய் கதைத்தது
வெளிச்சத்தின் வழித்தடத்தை;

கண்களையும் மீறி
மறைந்து இருக்கும்
ஏதோ ஒரு ஒற்றையடிப்பாதையில்
துணையோடு
காத்துக்கிடக்கின்றன
என் காலடித்தடங்கள்;

துணை சேர்ந்த களிப்பில்
என்னை எள்ளி நகையாடும்
என் காலடித்தடங்களும் அறியவில்லை,
என் மனதின் தடங்கள்
என்னவனின் இதய வாசலை
என்றோ சென்றடைந்த ரகசியத்தை;

Tuesday 3 April 2007

எங்கோ நீயும்..

அன்றொரு நாள்
என் தனிமையின் பக்கங்களை
புரட்டிக்கொண்டே வந்தேன்.
திருப்பிய பக்கங்களெல்லாம்
பறைசாற்றின
நான் அறியா உன் இருப்பை.

வானம் வெறித்து
நான் மீன்களை வியத்தபோது
காணாமல் இருந்துவிட்டேன்
ஓரத்தில் நின்று
மீன்களோடு சேர்த்து
நீ என்னை வியந்ததை.

தறிகெட்ட எண்ணங்களை
கோர்த்திழுத்து
கனம் தாங்காமல்
என் மனம் பதறுகையில்
கவனிக்க தவறிவிட்டேன்
தாங்க துடித்த
உன் தோள்களை.

விழிகளைத் தாண்ட முயன்ற
என் கவலைகளை
நீர்த்திவலைகளை
மீண்டும் புதைத்தேன்
என் விழிகளுக்குள்
துடைக்க காத்திருந்த
உன் விரல்களை அறியாமல்.

புரட்டிய பக்கங்களெல்லாம்
சொல்லியன,
என் தனிமையின் கணங்களில்
நான் மூழ்கும் போதெல்லாம்
என் விழிப்பார்வையின்
எல்லைக்கப்பால்
எங்கோ நீயும்..

Friday 2 March 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை(தொடர்ச்சி)


உளறுதல்,
என் உள்ளத்தின் வேலை மட்டுமே.
அதனால் தான்
தப்பி ஓடுகின்றன
வார்த்தைகள்
என் மொழியில் அகப்படாமல்.

வாசலை திறந்து
காத்துக்கொண்டிருந்தேன்
உன் வரவிற்காக,
உன் காலடிதடங்களையே
என் வீட்டு கோலமாக்க.

இதோ கேட்கின்றது
காலடி ஓசை
என் இதயத்துடிப்பின்
காதல் ஓசை.

முகத்தில் சிரிப்பை சுமந்து
உள்ளே நுழைந்ததும் கேட்கிறாயே
நான் எங்கே என்று.
இன்னும் தெரியவில்லையா?
நான் என்றோ
உன்னுள் நுழைந்தது.

உன்னோடு பேசுகையில்
வாயிலிருந்து வரும் வார்த்தைகள்
தடுமாறுகின்றன
வழி தெரியா
குழந்தையைப் போல்.

நீ மெல்ல
வார்த்தைகளின்
கைப்பிடித்து செல்கிறாய்
உன் இதய வாசலுக்கு.

சொல்லொண்ணா வார்த்தைகளும்
சொல்லாத ஒன்றை
சொல்லிக்கொண்டிருக்கிறது
உன் சிரிப்பு.

ஆம்,
உன் உதட்டோரத்தில் வழியும் சிரிப்பில்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
என் காதல்.

Thursday 15 February 2007

உன்னில் நுழைய..

சேமித்து வைத்த மெளனங்கள்,
என்னை கேலி செய்ய,
நான் தாளை எடுத்தேன்,
என் நேசத்தை வார்த்தைகளாய் பிரசவிக்க;

எழுதிய வார்த்தைகளை விடவும்,
எழுதப்படா மெளனங்கள் அதிகரிக்க,
அவற்றை கோர்த்து மாலையிட்டேன்,
உன் நிழலுக்கு.

உன்னை நோக்கி,
நான் எடுத்து வைத்த அடிகளை,
கணக்கில் கொண்டால்,
உலகையே அளந்து விடலாம்,
ஆனால் உன்னை இன்னும்
நெருங்க முடியவில்லை;

வானத்து சூரியனாய்
நீ இருக்க,
சுட்டெரித்தாலும்
நிழல் தேடா உயிராய் நான்;

உன் நினைவுகள் என்னை எரித்து,
பிடிசாம்பலாய் மாறினாலும் காத்திருப்பேன்,
காற்றோடு கலந்து,
உன் சுவாசமாய்
உன்னில் நுழைய..

Friday 26 January 2007

உண்மையின் உண்மை..
விரல்களின் ஊடே வடியும் வார்த்தைகள்
என்றும் தொட்டதில்லை
உண்மையின் விளிம்பை;

நாவில் பழகும் இனிய சொற்கள்
என்றும் சொன்னதில்லை
உண்மையின் சொல்லை;

முகத்தில் தெரியும் குறிப்புகள்
என்றும் காட்டியதில்லை
உண்மையின் உருவத்தை;

தேங்கி நிற்கும் உண்மைகளை
வழிய விட்டால்
கன்னத்து கோடுகளும் சாட்சியாகிவிடுமென
நீ
கண்களை மூடியதை
என் கண்கள் கண்டுக்கொண்டன;

கண்களில் தெரியும் ஏதோ ஒன்று
காட்டி கொடுத்துவிடுகிறது
உண்மையின் உண்மையை.