Wednesday, 13 December, 2006

காத்துக் கொண்டிருக்கிறான்...சர்வ அலங்கார ரூபனாய்
கடவுளை காண
கைக்கூப்பி
திரை விலக
காத்துக் கொண்டிருக்கிறான்
பக்தன்;


கடவுளோ,
உபயதாரரின் வருகைக்கு.

Wednesday, 22 November, 2006

எனக்கான காதல் துளிகள்..

கண்ணோடு கண் சேரவில்லை;
கனவுகள் நாம் காணவில்லை;
யாருமற்ற வெளிகளில்,
நீயும் நானும்,
எல்லாமாக திரியவில்லை.

கைத்தலம் பற்றி,
காதலாகி,
கசிந்துருகி,
நீ,
என்றும் சொன்னதில்லை,
உன் நேசத்தை.

எனினும்,
நான் நிதமும் கண்டுக்கொள்கிறேனடா,
இமைகள் தடுத்தும் இயலாமல்
உன் விழியோரம் கசியும்
எனக்கான
காதல் துளிகளை.

Wednesday, 1 November, 2006

கடவுள் தரிசனம்..

சிரிக்கும் உன் விழிகளில்
வழியும் அன்பு;
சிறு சிணுங்கலிலும்
தெறித்து விழும் நேசம்;
கைகட்டி நிற்பவரையும்
தொடத் தூண்டும் மென்மை;
மனம் கனமாகி
விழிகள் குளமாகி
எண்ணங்கள் உறையும் பொழுது,
உன்னை ஆரத் தழுவி
உச்சி முகர்ந்து
உன் கண்களில் முழுகி தொலைந்து போகும்
ஒவ்வொரு நொடியும் தரிசிக்கிறேன்,
கடவுளை.Thursday, 5 October, 2006

யார் விரலும் தீண்டியிராத என் வீட்டு அழைப்பு மணி


தனிமையின் கரங்கள் என்னை அணைத்துக் கொண்டன
தன்னுலகத்துள்.

நிதம் விழித்தவுடன்
வெறுமையின் தரிசனம்.

யாருக்காகவும் காத்திர வேண்டியதில்லாத
கணங்களின் கனம்.

விரல்களே உண்ணும் வண்ணம்
பசியிருந்தும்
தட்டில் வைத்தவுடன்
கை போடுகின்றது கோலம்.

தன்னையும் நினைப்பவர் யார் என்று
புரையேறுகையில் தேடுகிறது மனம்.

என் நிலை எண்ணி
தானே சிணுங்கிறது என் தொலைப்பேசி

தனிமையுலகத்தின் வாயில் வழியே
உள்ளே வழியும் வார்த்தைகளுக்கு காத்திருக்கிறோம்
நானும்,
யார் விரலும் தீண்டியிராத என் வீட்டு அழைப்பு மணியும்

Thursday, 21 September, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்(1)

மரணத்தின் வாசலுக்கு துணைக்கழைப்பது தெரியாமல்
குழந்தையின் கைப்பற்றி செல்லும் தாய்.

கண்களில் கனவோடும் கைகளில் வாழ்க்கையோடும்
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள்.

காத்திருக்கும் குடும்பத்தின் கவலை தீர்க்க
பணிக்கு செல்லும் தலைவன்.

நழுவும் நிமிடங்களை பிடித்திழுத்து
நிரந்தரமாக்க துடிக்கும் அன்பு காதலர்கள்.

கண்மூடி திறக்கும் முன்
கனவுகள் சிதறின ரத்த துளிகளாய்.

காலங்கள் மாறினாலும்,
தேசங்கள் மாறினாலும்,
யுகங்கள் தாண்டி மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு அரங்கேற,
ஒரே மெளன சாட்சியாய் இன்னும் இருக்கிறது ஆகாயம்,

என்றாவது யுத்தம் மறைந்து
மனிதம் தலைதூக்கும் என்ற நம்பிக்கையில்.

இன்னும் இருக்கிறது ஆகாயம்(2)

இடியைத் தோற்கடிக்கும் வலியைக் கொடுத்து,
நிலத்தில் வீழ்ந்த என் பிஞ்சு விரல்களின் ஈரம் தொட்டு,
உன் வலிகளைத் துடைத்துக் கொண்டாய்.

அடி மேல் அடி வைத்து நடை நான் பழக,
தவறிய அடிகளுக்கு வலி நீ சுமந்தாய்.
பாடம் கேட்க பள்ளி நான் செல்ல,
இங்கு உழைத்து கரைந்தாய் நீ மெழுகாய்.
காலஓட்டத்தில் காதலுற்று நான் தவிக்க,
கசிந்துருகி மேன்வழி நீ காட்டினாய்.

தாயாகி நீ செய்தவைக்கு நான் என் செய்ய?
என்று நான் வினவ,
நீ புன்னகையுடன் பட்டியலிட்டாய்
எனக்கு செய்ய முடியாதவைகள் எவை என்று.

உன் அன்பில் நான் திகைக்க,
பதில் கிடைத்தது என் வினாவிற்கு.

அழியா ஆகாயம் போல்,
அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்,
"அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,
பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்"

Sunday, 27 August, 2006

எடுக்க வா(?) தொடுக்க வா(?)ஏதோ சொல்ல வந்து
பின் சொல்லாமலே
கால்களை வருடிச் செல்லும்
கடலலைகள் போல்,
உன் முகம் கண்டவுடன்
பின் வாங்குகின்றன,
மன அலைகளாய் எழுந்த
என் ரகசியங்கள்.

சொல்லாத ரகசியங்கள்
என் மனக் கடலில்
புதைந்து கிடக்கின்றன
முத்துக்களாய்.
அவற்றை எடுக்க வா(?) தொடுக்க வா(?)

Wednesday, 9 August, 2006

தேட ஆரம்பித்தேன்


நெருக்கமான இரவுகளின்,
நெருப்பான கணங்களில்,
நான் உன்னை சேர்ந்திருந்த போது,
என் கண்களில் தோன்றி மறைந்தது,
நீ என் கைப்பிடித்து,
காதல் சொன்ன கணங்கள்;

மெல்லச் சிரித்தப்படி,
நான் உன் புறம் திரும்ப,
நீயோ வெகு நாள் தாகம் தீர்ந்த பாவனையில்,
மறுபுறம் திரும்பினாய்.

திடிக்கிட்ட நான்,
தேட ஆரம்பித்தேன்,
கட்டிலில் தொலைந்த நம் காதலை.

Wednesday, 26 July, 2006

உன்னை நேசிக்க துவங்கினேன்
விண்மீன்களை எண்ணத் துவங்கினேன்,
வண்ணத்துப் பூச்சிகளை வியக்க துவங்கினேன்.

மழைச் சாரலில் நனையத் துவங்கினேன்,
மனதினுள்ளே பேசத் துவங்கினேன்.

(நீ)சொன்னதை செய்யத் துவங்கினேன்,
செய்தவுடன் சொல்லத் தயங்கினேன்.

காலைகளைத் துரத்த துவங்கினேன்,
இரவுகளை அழைக்கத் துவங்கினேன்.

தூக்கத்தை விற்கத் துவங்கினேன்,
கனவுகளை வாங்கத் துவங்கினேன்.

துவங்கியதை நிறுத்த தயங்கினேன்,
தயங்கியதை செய்யத் துவங்கினேன்.

என்னிலிருந்து என்னை துரத்த துவங்கினேன்,
உன்னை என்னுள் அழைக்கத் துவங்கினேன்.

துவக்கத்திற்கெல்லாம் முடிவில்லாமல் போனால் என்ன?
என நினைக்கத் துவங்கினேன்,
உன்னை நேசிக்கத் துவங்கினேன்.

Tuesday, 18 July, 2006

அவன் என்னை மறுத்ததை
களையற்ற முகத்தைக் காட்ட மறுக்கும் நிலைக்கண்ணாடி,
நேரம் கரைவதை உணர்த்த மறுக்கும் கடிகாரம்,
வாட மறுக்கும் சூடியப் பூச்சரம்,
இமைக்க மறுக்கும் கண்கள்,
சிணுங்கலை நிறுத்த மறுக்கும் கால் கொலுசுகள்,
நெகிழ்வதை தடுக்க மறுக்கும் இதயம்,
இவை அறியுமோ,
அவன் என்னை மறுத்ததை.

Friday, 30 June, 2006

நித்தமும் இரவுகளில்
நித்தமும் இரவுகளில்,
உயிர் விடுத்து வாழ்கிறோம்,
நிஜமான விடியலை எதிர்நோக்கி;

பல விடியல்கள்,
வந்தன;
போயின;
எங்களிடம் இரவுகளில் வருபவர்களைப் போல்.

புற அழுக்கோடு நாங்களும்,
அக அழுக்கோடு அவர்களும்,
நித்தம் இரவுகளை எச்சில்படுத்த,
இந்த விடியல்களுக்கோ,
நாங்கள் வயதினைக் கடந்த'அழகிகள்';

அழகிகளைக் கண்ட விடியல்கள்,
ஒரு முறைக் கூட கண்டதில்லை,
'அழகன்களை';

இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம்,
அந்த உண்மையான விடியலை.

Friday, 16 June, 2006

இன்றும் இரவு வரும் என...இரவின் ஆழங்களில்,
தோண்டத்தோண்ட,
கிடைத்தன நம் கனவுகள்.

கனவுகள் கைக்கோர்த்து,
உலவிய அந்த உலகத்தில்,
நீயும் நானும் மட்டுமே.

இரவின் நிலவொளியும்,
நமக்கு தகிக்க;
விண்மீன்கள்,
நம்மை வேவு பார்க்க;
நாம் முகம் சிவந்து,
மேகங்களின் நிழல்களில் மறைந்தோம்.

வாழ்ந்துக் கொண்டேயிருக்கையில்,
சட்டென்று விடிந்தது;
இரவு தொலைந்தது;
உன்னையும் இருட்டில் இழுத்துக் கொண்டு.

தனிமையில் நான் காத்துக்கொண்டிருக்கின்றேன்,
இன்றும் இரவு வரும் என.


Thursday, 8 June, 2006

குமையும் எரிமலையாக..

சிந்தனைகள் சிதற,
எண்ணங்கள் எங்கோ எகிற,
குமையும் எரிமலையாக,
காத்துக்கொண்டிருக்கிறேன்,
சிறு தூண்டலிலும் வெடியக்கூடிய அந்த கணத்திற்காக.

Saturday, 20 May, 2006

நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!


பாவனையற்ற நிலைப்பாடுகளும்,
பரஸ்பர பகிர்வுகளும்,
இயல்பான பேச்சுக்களும்,
உள்நோக்கில்லா தொடுதல்களும்,
ஆரோக்கியமான சிந்தனைகளும்,
கொண்ட நம் நட்பு,
சமூக துச்சாதனர்களால்
துகிலுரியப்படும் வரை,
நான் உணரவில்லை நண்பா,
நீ ஆணென்றும்!
நான் பெண்ணென்றும்!

Wednesday, 26 April, 2006

புரிதல் என்பது..

குத்திக் கிழித்தன உன் வார்த்தைகள்,
என் இதயத்தில் இறங்கிய கத்தியாய்.

புரிதல் என்பது,
புரிந்துக்கொள்ளப்படாமல் போகும் பொழுது
கண்களில் நிரம்பி,
என் கன்னங்களில் வழிந்து,
வலியின் சுவடுகளை விட்டுச் சென்றது,
என் கண்ணீர் துளிகள் அல்ல,
கிழிந்த என் இதயத்தின்,
ரத்த துளிகள்...

Tuesday, 18 April, 2006

காலடிச் சுவடுகள்.
உன் நினைவுகளை,
என்னில் சுமந்து,
நான் கடந்த பாதையெல்லாம்,
உன் காலடிச் சுவடுகள்.

Thursday, 6 April, 2006

எனக்கான உன் வருகை

உனக்கான என் கணங்கள்
கரைந்துக் கொண்டிருக்க,
உனக்கான என் வார்த்தைகள்
வளர்ந்துக் கொண்டிருக்க,
உனக்கான என் மனவெளி
விரிந்துக் கொண்டிருக்க,
உனக்கான என் ஆசைகள்
அலைந்துக் கொண்டிருக்க,
உனக்கான என் எல்லாம்
இருந்துக் கொண்டிருக்க,
உனக்கான நான்
காத்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கான உன் வருகை நோக்கி!

Friday, 31 March, 2006

நீ..


என் கனவுகளில் நீ புகுந்தாய்.
பல இரவுகள் கடந்தன,
பல விடியல்கள் புலர்ந்தன,
நான் இன்னும் கண்விழிக்கவில்லை.

Wednesday, 22 March, 2006

விண்மீன்கள்!

தரையெங்கும் சிதறிக் கிடந்தன
விண்மீன்கள்!
வீதியில் இறங்கி நடந்த,
உன்னை,
நிலவென்றெண்ணி வரவேற்க!

Monday, 13 March, 2006

கோடை மழை

வறண்டுப் போன
பூமித் தாய்க்கு
வான மகள் போட்ட
வைட்டமின் ஊசிகள்.

Wednesday, 8 March, 2006

என்றும் அழியா வானமாய் இருந்து விடு!!


வானத்தில் மேகங்கள்,
பூமியில் பெண்கள்,
இரண்டுமே மாறும் இயல்புடையவை.

மேகம்,
மலராய்,புலியாய்,
மரமாய்,செடியாய்.

பெண்,
மகளாய்,மனைவியாய்,
தாயாய்,தோழியாய்.

உருவங்கள் மாறலாம்,
உணர்வுகள் மாறலாம்,
ஆனால் நீ?

வானில் மேகங்கள் உருமாறி கலைவது போல்,
நீயும் உருமாறிக் கொண்டே,
இறுதியில்,
உன்னை அறிந்து கொள்ளாமல் ,
கலைந்து விடாதே.

கொஞ்சம் நீயாகவும் இரு!

மாறும் இயல்பில்,
உன் இயல்பை மறக்காதே,மறைக்காதே.

மாறும் இயல்புடைய
மேகமாய் இல்லாமல்,
என்றும் அழியா வானமாய் இருந்து விடு.

Friday, 3 March, 2006

என்னை பிறக்க விடு!


இருளில் அலைந்தேன்,
நீரில் மிதந்தேன்,
பயமில்லாமல்,
உன்னுள் இருக்கும் வரை.

என் உடல்,
என் உயிர்,
என் உணவு,
எல்லாம் கொடுத்தாய்,
நான் பெண் என்று அறியும் வரை.

எல்லாம் கொடுத்துவிட்டு,
என்னையே விலையாக கேட்கிறாயே!

நீயும் பெண் என்பதை மறந்தாயோ?
சமூகம் கேட்கும்,'ஆயிரம் கேள்விகள்'
அனைத்தும் பதில் சொல்லத் தகுதியற்றவை!

உன்னால் உருவாகி,
உன்னுள் வடிவாகி,
உன்னிடம் பிறப்பதால்
நான்,
உன்னுடையவள் அல்ல,
என் உயிர்
என் உரிமை மட்டுமே.

உன் கருவறை,
என் கல்லறையாகி விட வேண்டாம்.

தூணிலிருந்து வெளிபட்ட தர்மம்
அதர்மத்தை அழித்ததுப் போல்,
உன்னிலிருந்து வெளிப்பட்டு
நான் அழிப்பேன்
இந்த சமூக அவலங்களை.

என்னை பிறக்க விடு.
சமீபத்தில் படித்த வாஸந்தியின் "கடை பொம்மைகள்" பெண் சிசு கொலையை கதை களமாகக் கொண்டது. கருவிலிருக்கும் ஒரு பெண் குழந்தை , தன் தாயிடம் பேசுவது போல அமையும் ஒரு கவிதையை முயற்சி செய்தேன். தங்களின் மேன்மையான , உண்மையான கருத்துக்களை பதிவு செய்யலாம்.

Thursday, 23 February, 2006

சலனம்என் மனதில்
உள்ள எண்ணங்கள்,
வெறும் சலனமாய் வடிவிழந்து,
புகையாய் காற்றில் கலக்கும் முன்
வந்து சொல்வாயா?
அந்த வார்த்தைகளை,
"என்னை மணக்க சம்மதமா?".

Friday, 10 February, 2006

உண்மை விளம்பி!!!!

உன் விழிகளும் என் விழிகளும்
சந்தித்தன ;
இரண்டு இதயங்கள் இடறி விழுந்தன;
விழுந்த இதயங்களை
எடுக்க நாம் முயல,
அவை இரண்டும் ஒன்றாகி,
நம்மை பார்த்துச் சிரித்தது,
விழிகளை பிரிக்க முடிந்த நாம்,
இதயங்களைப்
பிரிக்க முடியாமல் திகைத்தோம்!!!!
விழிகள் பொய் கதை சொல்லலாம்,
ஆனால்,
இதயம் என்றும் உண்மை விளம்பி!!!!

Tuesday, 7 February, 2006

இரவு காட்சி முடிந்து,
பகல் காட்சி ஆரம்பிக்கப்போகிறது.
ரசிகர்களாகிய பனித்துளிகள்,
இலைகள் என்னும் இருக்கைகளில் அமர்ந்திருக்க,
அதோ
கதாநாயகனாகிய கதிரவன் வர,
கதாநாயகியான தாமரையும் மலர,
பாவம்,
இந்த பனித்துளிகள் ஆர்ப்பரிக்கின்றன,
தாங்கள் கரையப்போவது தெரியாமல்...